சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் தாக்கம் மிக்க இந்த சூழ்நிலையில் தமது விடுதலை தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவுகின்ற இந்த சூழ்நிலையில் சிறையில் தமக்கு உரிய சுகாதார வசதிகள் இல்லை.

மருத்துவ பரிசோதனைகள் உரியவகையில் நடத்தப்படுவதில்லை. தாம் 17 முதல் 20 வருடங்களாக தாம் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் குடும்பங்களை பிரிந்து துன்படுவதாக 78 தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர்கள் கொழும்பு மெகசின், கண்டி- போகம்பறை, மஹர, அநுரதபுரம், யாழ்ப்பாணம், பதுளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைகளில் தடுத்துவைக்கப்பட்;டுள்ளார்கள். இதில் 6 பெண்கள் அடங்குகின்றனர்.

இந்தநிலையில் தமது கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் 78 தமிழ் அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்நிலையை செய்துகொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. எனவே இதனை பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க எதிர்பார்ப்பதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.