பொறியில் சிக்கிய அரியவகை கரும்புலி

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையின் மலையக பகுதிகளில் மாத்திரே வாழும் அரிய வகை கரும்புலி ஒன்று பொறியில் சிக்கி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவின் லக்ஷபான தேயிலை தோட்டத்தின் வாலமலை பிரிவில் காய்கறி தோட்டத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பொறியில் கரும்புலி ஒன்று சிக்கியுள்ளதாக வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலை பிரதேசத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இந்த கரும்புலிகள் வாழ்வதாக கூறப்பட்டாலும் இதற்கு முன்னர் இந்த விலங்கு எவருடைய கண்களுக்கும் அகப்படவில்லை.

காய்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த கம்பி பொறியில் இந்த புலி சிக்கியுள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவர்கள் மயக்க மருந்து அடங்கிய ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தி புலியை மீட்டுள்ளனர்.

அதுவரர பொலிஸார் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்ததாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.