ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் படிப்படியாக வழமைக்கு திரும்பியுள்ள இலங்கையின் பல பகுதிகள்

Report Print Theesan in சமூகம்

இலங்கையில் கொவிட் - 19 தாக்கம் காரணமாக நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்ட நிலையில் நாட்டின் பெரும்பாலான பாகங்களிலும் மக்கள் தமது இயல்பு நிலைக்கு படிப்படையாக திரும்பி வருகின்றனர்.

வவுனியா

வவுனியாவில் இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும் அரச திணைக்களங்களின் ஊழியர்கள் கடமைக்கு திரும்பியிருந்ததுடன் மக்களும் தமது தேவைகளை நிறைவு செய்வதற்காக அரச திணைக்களங்களுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை வடமாகாணத்திற்குட்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போல இடம்பெற்றிருந்ததுடன் வெளிமாவட்டங்களிற்கு செல்வதற்காக அதிகளவான பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலில் கைகளை கழுவி செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகம்

மலையகத்தின் நாளாந்த நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி உட்பட ஏனைய சில மாவட்டங்களுக்கான அரச மற்றும் தனியார்துறை போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றுள்ளன.

ஹட்டன், நுவரெலியா, பொகவந்தலாவை, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட், பூண்டுலோயா, தலவாக்கலை ஆகிய நகரங்களில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

செய்தி - திருமால்