யாழில் டெங்கு நோய் அபாயம்! அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Sumi in சமூகம்

யாழ். மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்போதுள்ள நிலையில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக இந்த கூட்டத்தில், பிரதேச மட்ட குழுவினுடைய செயற்பாடுகள், கிராமிய சுகாதார குழுக்கள் திறம்பட செயற்படுவது பற்றியும், அவை முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனவும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஆராயப்பட்டது.

குறிப்பாக கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிரமமாக மேற்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் அவ்வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போது எதிர்நோக்குகின்ற இடர்பாடுகளை களைவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரி நிற்கின்றோம்.

குறிப்பாக இன்றைய தினம் முக்கியமாக வெற்று காணிகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

வெற்று காணிகளில் அந்த காணி சொந்தக்காரர்கள் அந்தக் காணியை முறைப்படி, குறிப்பாக பற்றைகளை வெட்டி அகற்றி அதற்கு மேலாக அங்கு காணப்படுகின்ற சிரட்டை, பிளாஸ்டிக் கொள்கலன் போன்றவற்றை அகற்றுவது பிரதானமானதாக காணப்படுகின்றது.

அதேபோன்று வீடுகளிலும் நீர் வழிந்தோடும் பகுதிகளை அடிக்கடி துப்பரவு செய்ய வேண்டிய கடப்பாடும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது கொவிட் -19க்கு இணையாக இந்த டெங்கு பரவலும் நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றது.

ஆகவே டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாவட்டத்தில் நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

ஆகவே டெங்கு தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வாரமொன்று எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கிராம மட்டம், பிரதேசமட்டம் மற்றும் மாவட்ட மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படவுள்ள திகதிகள் தொடர்பில் அதிகாரிகளால் விரைவில் அறிவிக்கப்படும். எனவே இந்த வாரத்தில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பெற உள்ளது.

கிராம மட்டம், பிரதேச மட்டம் மாவட்ட மட்டம் என்ற நிலையில் இடம்பெறவுள்ள குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் டெங்கு நோய் ஏற்பட சாதகமாகவுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றினை அகற்றி டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.