பொலிஸாரின் தாக்குதல் குறித்து மாற்று வலுவுடையவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Report Print Sumi in சமூகம்

மாற்று வலுவுடையவர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார் கடுமையாக தாக்கியதாக மனித உரிமைகள்ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் கடந்த வாரம் இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.அவ்வாறு சென்ற பொலிஸார் மீதும் வாள்வெட்டு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கீரிமலையை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.எனினும் அவ்வாறு கைது செய்யப்பட்ட மாற்று வலுவுடைய சந்தேக நபர் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அத்துடன் பொலிஸார் தம்மை கடுமையாக தாக்கியதாக பொலிஸாருக்கு எதிராக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில்,முறைப்பாட்டினை பதிவு செய்தவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கீரிமலை பகுதியில் நான் வசித்து வருகின்றேன்.கடந்த வாரம் எனது வீட்டிற்கு அருகில் இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் மோதல் சம்பவம்இடம்பெற்றுள்ளது.

மோதல் நடைபெற்ற வீடு என்னுடைய வீடுதான் என நினைத்து வந்த பொலிஸார் பூட்டியிருந்த எனது வீட்டின் படலையை உடைத்து உள்ளே வர முயற்சி செய்தனர்.அப்போது அங்கு நின்ற பொலிஸார் ஒருவருக்கு எனது வீட்டின் படலையில் இருந்த தகரம் கையில் வெட்டியுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்து என்னை கடுமையாக தாக்கினர்.அங்கவீனம் உற்ற என்னை கிழுவங்கடடைகளினால் அடித்து துன்புறுத்தினர்.

அப்போது எமது வீட்டில் மோதல் இடம்பெறவில்லை அயல் வீட்டிலேயே மோதல் இடம்பெற்றது என கூறினேன்.அதனையும் கேட்காத பொலிஸார் என்னை தடிகளாலும் கொட்டன்களினாலும் தாக்கினார்கள்.உடனடியாக என்னை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பின்னர் மறுநாளே நான் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

பொலிஸாரின் தாக்குதலினால் நாம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஐந்து நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.