சட்டத்தை மீறிய வகையில் தொண்டமானின் இறுதி சடங்குகள்! கொரோனா தொற்று ஏற்பட்டால் கடும் நடவடிக்கை

Report Print Murali Murali in சமூகம்

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய வகையில், அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எவருக்கேனும் கொரோனா தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டால் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பரிசோதகர் உபுல் ரோகன இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள், பாதுகப்பு படையினர், பொதுமக்கள் என அனைவரும் தியாகங்களை செய்துள்ளனர்.

இதனால் நாட்டு மக்கள் தங்களது சம்பிரதாயங்களை மறந்து, தமது உறவினர்கள் எவரும் உயிரிழந்தால் ஒரே நாளில் உடலை அடக்கம் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

சில நேரங்களில் பிள்ளைகளுக்கு தமது பெற்றோர் முகத்தை பார்க்க முடியாமல் போனது. சில பெற்றோருக்கு தனது பிள்ளையின் முகத்தை கூட இறுதியில் பார்க்க முடியாமல் போயிருந்தது.

இவ்வாறான நிலையில், கடந்த வாரம் உயிரிழந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் உடல் அஞ்சலிக்காக பொது இடங்களில் வைக்கப்பட்ட போது பொதுமக்கள் கூட்டமாக கூடியிருந்தனர்.

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய வகையில் பலரும் செயற்பட்டனர். இது குறித்து தற்போது பலரும் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எவருக்கேனும் கொரோனா தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டால் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்வோம்.

தேவையேற்பட்டால் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சட்ட திட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.