10 மணிநேரமாக வலியில் துடித்த கர்ப்பிணிப் பெண்: மருத்துவரின் உதாசீனத்தால் இறந்தது சிசு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கண்டி – பேராதனை வைத்தியசாலையில் மருத்துவர்களின் கவனக் குறைவினால் பிறந்த சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

கண்டி – பேராதனை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் நேற்று முன்தினம் மே 31ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையின் 19வது இலக்க மகப்பேற்றுப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

மகப்பேற்றிற்காக அவர் சற்று வலியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 11.45க்கு மகப்பேறு பிரிவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10 மணித்தியாலங்களாக அவர் வலியில் துடிதுடித்த போதிலும் அவரை மருத்துவர்களோ தாதியர்களோ கண்டுகொள்ளவில்லை என்றும் மாறாக தாதியர்கள் தங்களது தொலைபேசிகளில் உரையாடுவதும், தத்தமது சொந்த வேலைகளை செய்வதிலுமே நோக்கமாக இருந்ததாகவும் உயிரிழந்த சிசுவின் தந்தையான எச்.ஜி. கயன் சத்துரகுமார தெரிவித்தார்.

எனினும் குழந்தை பிரசவிப்பதற்காக அறிகுறிகள் அவரில் குறைவாக இருந்தபடியினால் சற்று பொருத்திருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

எனினும் வலி தாங்க முடியாமல் மருத்துவர்களையும், உதவி தாதியர்களையும் அழைத்த போதிலும் எவருமே பார்க்கவில்லை என்று அந்த தாய் தெரிவித்தார்.

இறுதியில் கத்தரித்து சிசுவை பிரசவித்து வெளியே எடுக்கும்படி தாயார் கூறிய போதிலும் அதனையும் மருத்துவர்கள் உதாசீனப்படுத்தியிருக்கின்றனர்.

இறுதியில் வலி தாங்கமுடியாமல் குறித்த தாய் உரத்தகுரலில் கத்தியதை அடுத்து தாதியர்களும், மருத்துவர்களும் அவருக்கு சிசேரியன் முறையில் குழந்தையை வெளியே எடுத்தனர்.

இறுதியில் குழந்தை இறந்த நிலையில் தனது அருகே வைக்கப்பட்டதாக குறித்த தாய் மற்றும் அவரது கவணர் கண்ணீருடன் கூறுகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர் மற்றும் தாதியர்களிடம் வினவியபோதிலும் அவர்கள் சரியான பதிலை வழங்கவில்லை என்றும், முகத்தைக்கூட பார்க்காமல் செல்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.