வெலிக்கடை காவல்நிலைய முன்னாள் பொறுப்பாளர் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

வெலிக்கடை காவல்துறைநிலைய முன்னாள் பொறுப்பாளர் சுதத் அஸ்மடல்லவை கைது செய்வதற்கான உத்தரவை வழங்குவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று மறுத்துள்ளது.

இந்தநிலையில் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

2016ஆம் ஆண்டு கொழும்பின் புறநகர் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து ஒன்றின்போது முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க செலுத்திசென்ற வாகனம் தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் முன்னாள் அமைச்சரின் வாகன சாரதியே குறித்த விபத்தின்போது வாகனத்தை செலுத்தினார் என்ற அடிப்படையில் வெலிக்கடை காவல்துறையில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இந்தநிலையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது வாகன விபத்தில் தொடர்புபட்டதாக கூறப்பட்ட வாகன சாரதி இரகசிய வாக்குமூலம் ஒன்றையும் நீதிமன்றத்தில் வழங்கினார்.

இதன்அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் 2016ம் ஆண்டு சம்பவத்தின்போது பதிவுகளை மாற்றியமைத்ததாக குற்றம் சுமத்தி வெலிக்கடை காவல்துறையின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைதுசெய்ய நீதிமன்ற ஆணையை பெறுமாறு சட்டமா அதிபர் நேற்று முன்தினம் காவல்துறையை பணித்திருந்தார்

இதனையடுத்து காவல்துறை,நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இன்று குறித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக கைது ஆணையை பிறப்பிக்க மறுத்துள்ளது.