உள்ளூராட்சி மன்றத்தினை ஏமாற்றிய நாடாளுமன்ற வேட்பாளர்

Report Print Theesan in சமூகம்

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் சுயேற்சைக்குழு உறுப்பினராக போட்டியிடவுள்ள வவுனியா நகரசபை உறுப்பினர் நகரசபை உறுப்புரிமையில் இருந்து விடுமுறை பெறாமல் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேர்தல் விதிமுறைகளின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகவோ அல்லதுஅரச உத்தியோகத்தராக உள்ள ஒருவர் தேர்தலில் பங்கேற்பதாக இருந்தால் குறித்த அரச பொறிமுறையின் தலைமைக்கு எழுத்துமூலமாக அறிவித்தல் வழங்கி விடுமுறை பெற்றிருக்கவேண்டும்.

எனினும் வவுனியா நகரசபையின் உறுப்பினராகவும்,வவுனியா பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றும் அப்துல் லரிப் என்பவர் தான் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு விடுமுறைக கோரிக்கையை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக வழங்கி அனுமதி பெற்றிருந்த போதிலும்மக்கள் பிரதிநிதியாக கடமையாற்றும் வவுனியா நகரசபை பிரதிநிதித்துவத்திற்கு விடுமுறை வழங்கவில்லை.

இவ்விடயம் இன்று வவுனியாவில் பேசுபொருளாக காணப்படும் நிலையில் இவ்விடயம்தொடர்பாக குறித்த நகரசபை உறுப்பினரிடம் கேட்டபோது,

தான் கடமையாற்றும் அரச பதவியான சமுர்த்தி உத்தியோகத்தர் பதிவியில் இருந்து சட்டபூர்வமாக விடுமுறை பெற்றுள்ளதாகவும் நகரசபை உறுப்பினர் பதவிக்கு விடுமுறை விண்ணப்பம் அளிக்கவில்லை எனவும் ஒத்துக்கொண்டதுடன் இரு மாதங்களுக்கான நகரசபை உறுப்பினருக்கான கொடுப்பனவை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த இரு மாத கொடுப்பனவையும் நகரசபைக்கு மீள செலுத்த தான் தயாராகஉள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளரிடம் தேர்தலில் போட்டியிடும் வேட்பளரான அப்துல் லரிப் தனது சமுர்த்தி உத்தியோகத்தர் பதவியில் இருந்துமுறையாக விடுமுறை பெற்றுள்ளாரா என கேட்டபோது,

தமக்கு விடுமுறைக்கான விண்ணப்பத்தினை அவர் தந்ததாகவும் அதனை தலைமையகத்திற்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை நகரசபை தலைவர் இ. கௌதமனிடம் குறித்த நகரசபை உறுப்பனர் நகரசபையின் உறுப்பினர் தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதனால் நகரசபை உறுப்பினர்பதவியில் இருந்து முறையாக விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தாரா என கேட்டபோது,

அவர் அவ்வாறு எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை எனவும், அவரது செயற்பாடுகள் சட்டத்திற்கு முரணாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சுயேற்சைக்குழுவில் போட்டியிடும் அப்துல் லரிப் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக முன்னாள் அமைச்சர் ரிசாட்பதியுர்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.