கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வுக்காக இணைந்து செயற்படும் பிரித்தானியா மற்றும் இலங்கை

Report Print Ajith Ajith in சமூகம்

பிரித்தானியாவும் இலங்கையும் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வுக்காக இணைந்து செயற்படவுள்ளன.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.

பிரித்தானியா நேற்று உலக தடுப்பூசி மாநாட்டை நடத்தியது. இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட்ட உலகளாவிய தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.

ஏற்கனவே 2000ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் அணியான 'காவி' அமைப்புக்கு உதவும் நோக்கிலேயே நேற்றைய மாநாடு நடத்தப்பட்டது.

எதிர்வரும் ஐந்தாண்டுகளில் 80 லட்சம் பேரின் உயிரைக்காப்பாற்றி 300மில்லியன் சிறுவர்களை சின்னமுத்து போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றும் திட்டத்துக்கு நேற்றைய உலக தலைவர்களின் மாநாடு தமது ஆதரவை வெளியிட்டது.

இந்தநிலையில் உலக தடுப்பூசி மாநாட்டின் மூலம் 32 அரசாங்கங்கள் மற்றும் 12 நிதியங்களிடம் இருந்து 8.8பில்லியன் டொலர்கள் நிதியாக திரட்டப்பட்டன.

காவி(புயுஏஐ) அமைப்பு உலகத்தின் வறுமையான நாடுகளின் 760 மில்லியன் சிறுவர்களுக்கு நிர்பீடனங்களை வழங்கி 133 பில்லியன் உயிர்களை காப்பாற்றியுள்ளது.

அத்துடன் கொரோனவைரஸ் எதிர்ப்பு விடயங்களில் பிரித்தானியாவின் உதவியுடன் பங்காற்றி வருகிறது.

இந்தநிலையில் மாநாட்டில் பங்கேற்ற கோட்டாபய ராஜபக்ச தொற்று நோய்களுக்கான நிர்பீடனங்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வீத்தர்வோல் நிறுவகம் ஆகியன 10மில்லியன் ரூபா நிதியீட்டில் இணைந்து கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி ஆராச்சியில் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அறிவித்துள்ளார்.