தர்கா நகரில் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் - 3 காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

Report Print Kamel Kamel in சமூகம்

அலுத்கம - தர்கா நகர் பகுதியில் சிறுவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளியான குறித்த சிறுவன் மீது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நாள் ஒன்றில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சீ.சீ.ரீ.வி காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை பரிசோதகர், சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் இவ்வாறு பணி இடைநிறுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார உள்ளிட்ட பலரும் இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவனை தாங்கள் தாக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.