படிப்படியாக வழமைக்கு திரும்பி வரும் மட்டக்களப்பு மாவட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக இன்று வர்த்தக நிலையங்களில் சனக்கூட்டம் காணப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகளை பேணிய வகையில் மக்கள் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றியுள்ளனர்.

சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடி நின்றதையும் அவதானிக்க முடிந்ததுடன் சிலர் முகக்கவசம் அணியாமல் தமது கடமைகளை நிறைவேற்றியுள்ளனர்.

போக்குவரத்தினை பொறுத்தவரையில் அரச போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் போக்குவரத்து செய்யும் மக்களின் தொகை குறைவாக இருந்துள்ளது.

பொலிஸாரும், படையினரும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தனர்.

அத்துடன் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அதனை அணியவைக்கும் நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.