முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டுமாடி கட்டிடம் ஒன்று நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த திறப்பு விழா நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாடசாலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து பாடசாலை வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் 12.30 க்கு முன்னதாகவே ஒழுங்கமைப்புக்களை செய்து காத்திருந்தனர்.
இந்நிலையில் 1.50 மணியளவில் பாடசாலையை தாண்டி செல்லும் ஆளுநர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதன் பின்னர் பாடசாலை திறப்பு விழா நிகழ்வுகள் இடம்பெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மாவட்ட செயலகம் நோக்கி சென்றுள்ளார்.
இந்நிலையில் திறப்பு விழாவுக்காக பல மணி நேரமாக ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் காத்திருக்கின்றனர். ஆளுநர் பாடசாலையை கடந்து சென்றபோதும் உரிய திட்டமிடல் இன்மை காரணமாக பாடசாலை நிகழ்வுக்காக வருகைதந்த மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.