வெள்ளை வான் ஊடக சந்திப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பிடியாணை

Report Print Steephen Steephen in சமூகம்
70Shares

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பான சம்பவத்தின் சந்தேக நபர்களான சரத் குமார மற்றும் அத்துல சஞ்ஜீவ மதநாயக்க ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டு பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இதன் காரணமாக அவர்களை கைது செய்ய மேலதிக நீதவான் பிரியந்த லியனகே பிடியாணை பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

எனினும் மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் நான்காவது சந்தேக நபரான அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர் மாத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள், சரத் குமார மற்றும் சஞ்ஜீவ மதநாயக்க ஆகிய சந்தேக நபர்கள், கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பான கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள போதிலும் அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களுக்காக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் முன்வைத்த வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பு தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நடத்தி வரும் விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.