வவுனியாவில் ஆலய சூழலை சீர்கேடான நிலைக்கு தள்ளும் குடிமகன்கள்

Report Print Theesan in சமூகம்
69Shares

வவுனியா - குடியிருப்பு குளப்பகுதியில் நின்று மது அருந்துபவர்கள் மதுப்போத்தல்களை அப்பகுதியில் வீசுவதால் சுகாதார சீர்கேடான நிலமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் சித்தி விநாயகர் ஆலயம் என்பன அமைந்துள்ளன. இதனால் மாலை வேளைகளில் அப்பகுதி அதிகளவான மக்கள் மற்றும் சிறுவர்கள் வந்து செல்லும் இடம் என்று தெரிவிக்கப்படுகிறது .

இந்நிலையில் மாலை வேளைகளில் அங்கு நின்று மது அருந்துபவர்கள் மதுபோத்தல்களை குளத்தினுள் வீசுவதுடன், ஆலய சூழலுக்கு அண்மையில் வீசிவருவதும், போத்தல்களை வீதிகளில் போட்டு உடைக்கும் நிலையும் நீடித்து வருகின்றது.

இதனால் அப்பகுதி முழுதும் மது போத்தல்களால் நிறைந்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

இதேவேளை மதுபோதையில் நிற்கும் இளைஞர்கள் அப்பகுதியால் பயணிப்பவர்களிடத்தில் வம்புசண்டையினை ஏற்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது.

எனவே குறித்த பகுதியில் மது அருந்தும் நடவடிக்கைகளிற்கு பொலிஸார் தடைவிதிக்கவேண்டும் என அப்பகுதியை பயன்படுத்தும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.