வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுசெல்லபட்ட 30 மாடுகளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
நொச்சிகுளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவ்வீதியால் வருகை தந்த நான்கு வாகனங்களை வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.
இதன் போது குறித்த வாகனங்களில் 30 மாடுகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் பயணித்த அனுராதபுரத்தை சேர்ந்த 8 பேரை கைது செய்த பொலிஸார் வாகனங்களையும், மாடுகளையும் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மாடுகள் மருதோடை பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கி எடுத்து செல்லப்படவிருந்ததுடன், அவற்றை எடுத்து செல்வதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார் கைப்பற்றப்பட்ட மாடுகள் அதன் உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதா? அல்லது களவாடப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.