மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்களை இழந்துள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வரும் இலங்கையர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் தொழில்களை இழத்தல் உட்பட பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போது சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், ஊழியர்கள் சம்பளம் கிடைக்காத பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் சிலருக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படுவது, சிலரது சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மேலதிக பணி நேர கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை எனவும் தெரியவந்துள்ளதாக பணியகம் கூறியுள்ளது.

அதேவேளை கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் சுமார் 30 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு செல்ல எதிர்பார்த்திருந்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர்களும் அந்த தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டுள்ளதென இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நபர்கள் அது குறித்து தத்தமது நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு தூதரகங்களில் தமக்கு எந்த உதவிகளும் கிடைக்கப்பதில்லை என பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தாம் தங்கியிருப்பதற்கு கூட இடமில்லை என்பதுடன் உணவும் கிடைக்கப்பதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கவோ, அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரவோ எந்த வேலைத்திட்டங்களும் இல்லை என்பதை காணக் கூடியதாக இருப்பதாக சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.