உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வீரர் மாற்றத்திற்கு அனுமதி பெறவில்லை!

Report Print Steephen Steephen in சமூகம்

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் விளையாடும் இலங்கை அணியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு மாற்றங்கள் சம்பந்தமாக அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சராக தன்னிடம் அனுமதியை பெறவில்லை என முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

தனியார் சிங்கள ஊடகம் ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றின் போதே அவர் இதனை கூறியிருந்தார்.

இறுதிப் போட்டிக்கு முன் இலங்கை அணியை சேர்ந்த ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் உபாதைகளுக்கு உள்ளாகினர். அவர்களுக்கு பதிலாக அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக்குழு, இலங்கையில் இருந்த சமிந்த வாஸ் மற்றும் சுராஜ் ரந்தீவ் ஆகியோரை அணிக்கு அழைக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த மாற்றத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தொழிற்நுட்ப குழுவின் அனுமதியும் கிடைத்திருந்தது.

எனினும் இந்த மாற்றத்திற்கு தான் அனுமதி வழங்கவில்லையென முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறிய போதிலும் அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்திற்கு அவர், அனுமதி வழங்கிய கடிதத்தின் பிரதியை வாராந்த ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்றதுடன், மூன்று தினங்களுக்கு முன்னர் அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்திற்கு அனுமதி வழங்கிய கடிதத்தில் அமைச்சின் செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.