ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி கலந்துரையாடல்! முன்னிலையாக மறுக்கும் சட்டமா அதிபர்

Report Print Ajith Ajith in சமூகம்

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவின் இடைக்கால தடைக்கோரிய மனுவின் மீது தம்மால் காவல்துறையினர் சார்பில் முன்னிலையாக முடியாது என்று சட்டமா அதிபர் செயல் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

தமது ஆலோசனையை உரிய முறையில் செயற்படுத்தாமை காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் நடத்தியமை தொடர்பில் கிஹான் பிலப்பிட்டிய பதவியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தம்மை இடை நிறுத்தியமைக்கு இடைக்கால தடையுத்தரவைக்கோரி நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தாக்கல் செய்துள்ள மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு வருகிறது.

இந்த மனுவின் மீதே காவல்துறை சார்பில் தம்மால் முன்னிலையாக முடியாது என்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் நடத்தியமை தொடர்பில் ஏற்கனவே நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய, முன்னாள் நீதிபதிகள் பத்மினி ரணவக்க மற்றும் நீதிவான் ஹேமபால ஆகியோரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படவேண்டும் என்று சட்டமா அதிபர்,செயல் காவல்துறை அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.