திருகோணமலையில் சடலம் மீட்பு! கொலை செய்துவிட்டதாக தெரிவித்து இராணுவமுகாமிற்குள் புகுந்த நபர்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவடிச்சேனை பகுதியிலுள்ள கடற்கரையிலிருந்து கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் புத்தளம் - காரியப்பர் வீதியை சேர்ந்த முஹம்மது ஹனிபா ஹாரிஸ் (60 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கல்லடி - மீன்வாடி கடற்கரை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, தான் ஒருவரை கொலை செய்துவிட்டதாக தெரிவித்து குமாரவேல் சுப்பிரமணியம் (49 வயது) என்ற சந்தேகநபரொருவர் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்குள் புகுந்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரை இராணுவத்தினர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.