திரையரங்க உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Report Print Murali Murali in சமூகம்

திரையரங்குகளில் திரைப்படங்களை காட்சிப்படுத்தும் போது தேர்தல் பிரசார விளம்பரங்களை காட்சிப்படுத்தக் கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை பதில் பொலிஸ்மா அதிபர் வழங்கியுள்ளார்.

அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களுக்காக திரைப்படங்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, திரையரங்குகளில் திரைப்பட ஆரம்பத்தின் போது அல்லது திரைப்படத்திற்கு இடையில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுதல் தேர்தல் குற்றம் என்பதால் நாட்டின் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் கண்காணிக்க நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.