இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் - சுகாதார அதிகாரிகள் திணறல்

Report Print Vethu Vethu in சமூகம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தான் நம்புவதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கொரோனா கொத்துக்களை கட்டுப்படுத்தியதனை போன்று இதனையும் கட்டுப்படுத்த முடியும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதார பிரிவிடம் உள்ள சிறந்த வழியான தனிமைப்படுத்தல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

உரிய முறையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதென்பதற்காக தனிமைப்படுத்தாமல் இருந்து விடுபட முடியாதென அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆதரவினை இந்த முறையும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக இடைவெளி, முக கவசம், கை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை உரிய முறையில் பின் பற்றி தங்களின் செயற்பாடுகளுக்கு உதவுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக சுமார் 400 பேர் வரையில் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களுடன் தொடர்பிலுள்ள நபர்களை தேடும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இனங்காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தகாடு, வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.