சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மீது விசாரணை

Report Print Ajith Ajith in சமூகம்

போதைவஸ்து கடத்தல்காரர்களுடன் வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள போதைவஸ்து தடுப்பு காவல்துறையினருக்கு உதவியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படவுள்ளது.

குற்றப்புலனாய்வுத்துறை தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.

குறித்த சிறப்பு அதிரடிப்படையினர் தமது மேலதிகாரிகளின் அனுமதியின்றி சந்தேகத்துக்குரிய போதைவஸ்து தடுப்பு காவல்துறையினருடன் இணைந்து நாட்டின் பல பகுதிகளிலும் சோதனை நடத்தியுள்ளனர்.

ஆழ்கடலில் இருந்து 243கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துவந்ததாக கூறப்பட்டு கைது செய்யப்ப்பட்டுள்ள படகு உரிமையாளர் ஒருவர் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் அந்த போதைப்பொருளை காலி பலப்பிட்டிய என்ற பகுதிக்கு மக்கு போதைப்பொருளை எடுத்து வந்தமைக்காக போதைவஸ்து தடுப்பு காவல்துறையினரால் ஒருகோடி ரூபா வழங்கப்பட்டதாக படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொள்ளுப்பிட்டியில் சோதனை ஒன்றின்போது கைப்பற்றப்பட்ட 294கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் குறித்த படகு உரிமையாளரால் பலப்பிட்டியவில் உள்ள சுற்றுலா விருந்தகம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை சில நாட்களின் பின்னர் போதைவஸ்து காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் சேர்ந்த போதைப்பொருள் தொகையை பாதாள உலக குழு ஒன்றுக்கு வழங்கியுள்ளனர். பின்னர் அதே போதைப்பொருளை மீட்டதாக கூறி அவர்களை காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த போதைப்பொருளையே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சென்று பார்வையிட்டு அதனை கைப்பற்றியமைக்காக அதிகாரிகளை பாராட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.