ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது

Report Print Steephen Steephen in சமூகம்

போலி ஆவணங்களை தயாரித்து, அவற்றை சமர்பித்து, வர்த்தக கப்பல் ஒன்றில் பணியாற்றும் ஊழியராக ஐரோப்பாவுக்கு செயல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள், யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான இந்த நபரை கைது செய்துள்ளனர்.

இவர் இன்று அதிகாலை 3.15 அளவில் கட்டார் நாட்டின் தோஹா நோக்கி புறப்பட்டுச் செல்லவிருந்த கட்டார் விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் என தெரியவருகிறது.

வர்த்தக கப்பல் ஒன்றில் பணிப்புவதாக கூறி, இந்த நபர் ஏனைய கப்பல் ஊழியர்களுடன் தனது ஆவணங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் சமர்பித்துள்ளார்.

குறித்த நபரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர் சமர்பித்த ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்காக தொழிநுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் சமர்பித்த துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சு வழங்கிய கப்பல் பணியாளர் என்பதற்கான சான்றிதழ், பிணை சான்றிதழ், கப்பல் நிறுவனம் அவருக்கு தொழில் வாய்ப்பை வழங்கியமைக்கான சான்றிதழ் மற்றும் பயிற்சி சான்றிதழ் என்பன போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அதிகாரிகள் சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த ஆவணங்கள் தொழில் முகவர் ஒருவர் தனக்கு தயாரித்து கொடுத்ததாக கூறியுள்ளார்.

அத்துடன் தான் தோஹாவில் இருந்து வேறு ஒரு விமானத்தில் ஐரோப்பா செல்லவிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் போலி ஆவணங்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You may like this video...