முல்லைத்தீவில் போலி ஆவணங்களை பயன்படுத்தி அரச காணியொன்று விற்பனை

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு- விநாயபுரம் பகுதியில் போலியான தபால் தலை (முத்திரை) மற்றும் போலி ஆவணங்களையும் பயன்படுத்தி அரச காணியொன்றினை விற்பனை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் 1963ம் ஆண்டு குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது தனியார் ஒருவருக்கு குடியிருப்புக்காக வழங்கப்பட்ட அரச காணியொன்றில் நீண்டகாலமாக குடியிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காணி உரிமையாளர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் கடந்த 1998ம் ஆண்டு மேற்படி அரச காணி போலியான ஆவணங்கள் மற்றும் தபால்தலை என்பவற்றை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த காணி உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து 2009ம் ஆண்டுக்குப்பின்னர் மீளத்திரும்பி தனது காணிக்கு சென்ற போது போலி ஆவணங்கள் தயாரித்து காணி விற்பனை செய்துள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் 03ம் திகதி காணி விற்பனை தொடர்பான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாக ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளபோதும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள 3.50 ரூபாய் பெறுமதியான தபால் தலையானது 1999ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம்திகதியே வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது 1998ம் ஆண்டு வெளியிடப்படவில்லை என்று அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் காணி உரிமையாளரால் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் காணி உரிமை மாற்றம் தொடர்பான சத்தியகூற்று ஆவணமானது போலியான அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளமையினை தெளிவாக அவதானிக்கக்கூடியதாகவுள்ளது எனவும் குறித்த காணியை உரியவருக்கு பாரதீனப்படுத்த உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநரின் உதவிச்செயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த காணி தொடர்பிலான பிணக்கு கடந்த 21ம்திகதி மாந்தைகிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அரச காணி பிணக்குகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் விசாரணைகளில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளபோதும் போலியான ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.