இன்று சமூகத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி! பல இடங்களுக்கு சென்றதாக தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

பொலநறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தில் சேவை செய்யும் அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நிலையில் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதேச செயலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அதிகாரிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இவர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்டவர் எனவும் அவர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கவில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அதிகாரி லங்காபுர பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம், ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் வங்கிக்கு அண்மையில் சென்றுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த அதிகாரியுடன் நெருங்கி செயற்பட்டதாக கூறப்படும் சிலர் பொலநறுவை, ஹிங்குராங்கொட உட்பட பல பிரதேசங்களில் உள்ளதாக லங்காபுர பிரதேச சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் நெருங்கி செயற்பட்டவர்கள் தொடர்பில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார பரிசோதகர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த அதிகாரி சில தினங்களுக்கு முன்னர் பிரதேசத்தில் இடம்பெற்ற மரண வீடு ஒன்றில் கலந்து கொண்டிருந்தார் என தெரியவந்துள்ளது. அங்கு அவர் உயிரிழந்த நபரின் தகன நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. மரண வீட்டில் மாத்திரம் 14 பேருடன் தொடர்புபட்டுள்ளார் என சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான இந்த அதிகாரி பிரதேசத்தில் பல இடங்களுக்கு சென்று அண்மையில் விருந்து நடத்தியுள்ளார். அவருடன் நெருங்கி செயற்பட்டவர்களை தேடி தனிமைப்படுத்தும் நடவடிக்கை இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அந்த அதிகாரிக்கு அருகில் செயற்பட்ட 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 200 பேரிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.