பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் முறைப்பாடு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுவன்கேணியில் உள்ள பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அலுவலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பதாகைகள், துண்டுப்பிரசுரங்களும்,பதாகைகளும் எரியூட்டப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடாத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று களுவன்கேணியில் பொதுஜன பெரமுனவின் இரு ஆதரவாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களினால் நேற்றிரவு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதாகவும், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர்கள் இருவரும் ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களை பொதுஜன பெரமுனவின் தலைமை வேட்பாளரும், மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் சென்று பார்வையிட்டுள்ளார்.

ஒரு சுமுகமாக நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான அட்டகாசங்களை நடத்தியாவது வெற்றிபெறலாம் என இவர்கள் கருதுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.