கம்பவாரிதியின் கடிதம் தொடர்பாக....! சில மனப்பதிவுகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

அண்மையில் பத்திரிகையில் ஒன்றில் 'பெயரிடாக் கடிதமும் பெயரிட்ட பதிலும்'; என்ற பெயரில் கம்பவாரதி ஜெயராஜ் அவர்கள், முன்னாள் போராளி மனோகருக்கு (காக்கா அண்ணருக்கு) எழுதிய பதில் கடித ரீதியிலான விளக்கவுரையைப் படிக்க நேர்ந்தது...

அந்த விளக்கவுரை ஒரு பட்டிமன்ற விளக்கவுரைப் பேச்சுக்கே உரிய மொழி வீச்சை கொண்டிருந்ததால் அதனை உணர்வு பூர்வமான ஒரு கடிதத்திற்கு பதிலாக உரைக்கப்பட்ட பட்டிமன்றம் பேச்சாகவே ரசிக்க முடிந்தது என தெரிவித்துள்ளார் எஸ்.சண்முகதாஸ் (கோப்பாய்) என்பவர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அந்தப் பெயரிட்ட கடிதத்திலும் கம்பவாரிதியின் அதே பட்டிமன்றத் தமிழை ரசிக்கவே முடிகிறது. தர்க்க நியாயம் பட்டிமண்டபத்திற்கு சரி... ஆனால் யதார்த்த நிலைக்கு...?

கம்பவாரிதியின் பெயரிட்ட பதிலுக்கு மனோகர் (காக்கா அண்ணர்) அவர்கள் திருப்பிப் பதிலடி கொடுப்பார் என எவரும் நினைத்தால் அது ஏமாற்றமேயாகும். அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு விவாதப் பொருளாக இருக்கக்கூடிய பட்டிமண்டபப் பிரச்சினையே அல்ல...

ஒரு நண்பருக்கு எழுதிய மடலில் சொல்லப்பட்ட சில விடயங்கள் பொதுமக்களுக்கும் தெரியவேண்டிய தேவை இருந்ததாக அவர் உணர்ந்ததால்தான் பத்திரிகையில் வெளிவரவேண்டிய தாயிற்று என நான் எண்ணுகிறேன். அவ்வளவுதான்.

மேலும் அவர் தனது கடிதத்தினூடாக முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்குப் பிரச்சாரம் செய்ய முனைகிறார் எனச் சொல்லப்பட்டவிடயம் உண்மையன்று. அவர் தொடர்பாகக் கொள்கை அடிப்படையில் மனோகருக்கு மாறுபட்ட கருத்து உண்டு என்பதை நானறிவேன்.

அவர் அக்கடிதத்தில் 'சுமந்திரனுக்கு வாக்களிக்காதீர்கள்' என்று சொல்வதன் மூலம் விக்னேஸ்வரனுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவதாகக்கம்பவாரிதி; அர்த்தப்பட்டால்..? அதற்கு அவர் பொறுப்பாகார்.

பேரினவாதிகள் கொலு வீற்றிருந்து ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் சிறுபான்மை இனத்தவரின் ஜனநாயக உரிமைகள் (வாக்களிக்கும் உரிமையைத் தவிர...) எவ்வாறு மதிக்கப்படும் அல்லது மிதிக்கப்படும் என்பது கம்பவாரிதிக்கும் - மனோகருக்கும் பட்டறிவு அனுபவப் பாடமேயாகும்.

மனோகர் எழுதிய கடிதத்தில் அவர் பதிவு செய்திருப்பதாகக் கூறும் விடயங்களில் கம்பவாரிதி பற்றிய பதிவுகள் தனிப்பட அவர்கள்; இருவரிடையேயான பரஸ்பர அன்பு குறித்தவையாகும் என்றுதான் பார்க்கத்தோன்றுகிறது.

அடுத்தது தலைவர் பிரபாகரன் மீதான பதிவுகள் வெறுமனே விருப்புப் பதிவுகள் அல்ல. அவர் மீதிலான மதிப்புப் பதிவுகள் ஆகும். தலைவர் மீதான மதிப்பு பதிவுகள் கம்பவாரிதிக்கும் உண்டு என்பதற்குத் அவரது பட்டிமண்டபப் பேச்சு ஆதாரம்.

இந்த மதிப்பு தலைமீது உலகளாவிய தமிழர்கள் என்ற உணர்வுடன் தலை நிமிர்ந்து சிந்திப்போர் அனைவருக்கும் உண்டு இதற்குத் தலைவர் குறித்து பட்டிமண்டபங்களில் கம்பவாரிதி; பேச நேரும் போது அவருக்கு விழும் தொடர்ச்சியான கைதட்டுகளே ஆதாரம்.

விடயம் இப்படி இருக்கு.. அவர் மனோகரைப் பார்த்து 'உங்கள் தலைவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெறுமனே பிரபாகரன் என்று கூறியிருந்தாலும் பரவாயில்லை. 'உங்கள் தலைவர்' என குறிப்பிட்டமையால் கம்பவாரிதி; 'சுத்தமான சூசைப்பிள்ளை' என யாருக்கு நிரூபிக்கப் பார்க்கிறார் என்று தெரியவில்லை?

'யூ டியுப்' இல் கம்பன் விழா குறித்து கம்பவாரிதி பேசிய பேச்சொன்று உலா வருகிறது. அதில் அந்த கொடுமையான போர்க்காலத்திலும் கம்பன் விழாவை நள்ளிரவு வரை கண்டு களித்து விட்டு மக்கள் அனைவரும் எந்தவித பயமோ அச்சமோ இன்றி மின்சார வசதிகளற்ற சூழ்நிலையில் தங்கள் சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாக திரும்ப முடிந்ததென்றும்.

இளம் வயது, கையில் ஆயுதம், தட்டிக் கேட்க எவரும் இல்லாத சூழல் என எல்லாம் அமைந்திருந்தும் ஒரு சிறிய தவறு கூட நிகழ்ந்தது கிடையாது அதற்குக் காரணம் அங்கிருந்த தலைமையே என்றும் சுட்டிக்காட்டிப் பேசிப் பெருமளவில் கரகோஷமும் வாங்கியதை நான் ஒட்டுமொத்த தமிழினத்தின் சிறப்பையும் வெளிப்படுத்திய நிகழ்வாகவே பார்க்கிறேன்.

இந்த நிகழ்வை யூ - டியுப்பில் பார்க்கும்தோறும் என் உடலில் உள்ள ரோமங்கள் எல்லாம் ஒருமுறை குத்தி நிற்கும்.

கம்பவாரிதி கூற்றுப் படி அவர் அவர் மனோகருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் (கம்பவாரிதி உட்பட) தலைவர் என்றதை தலைவர் பிரபாகரனுடனான கம்பவாரிதியின் முதல் சந்திப்பு நிரூபித்திருந்தது.

நால்லூர் வீதிக்கு அருகாமையிலுள்ள ஒரு வீட்டில் அன்று தலைவர் கலைஞர்களைச் சந்தித்திருந்தார். அதில் கம்பவாரிதியும் கலந்து கொண்டு அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

அதில் கம்பவாரிதியின் முறை வந்தது. கம்பவாரிதி தன்னை அறிமுகப்படுத்த எழுந்தபோது தலைவர் அவரை நோக்கி அமரும்படி கையசைத்தபடி 'நீங்கள் கம்பன் கழகம் ஜெயராஜ். எனக்கு உங்கள் பேச்சுப்பிடிக்கும்.

ஆனால் உங்கள் கருத்துகளோடு எனக்கு முரண்பாடுகள் உண்டு,'என்று சொன்னாரே பார்க்கலாம். அவர் கம்பவாரிதி ஜெயராஜையும் அறிந்து வைத்திருந்தார்.

ஆட்டிஸ் மணியத்தையும் அறிந்து வைத்திருந்தார். நாட்டுக் கூத்து சுப்பையா அண்ணாவியையும் அறிந்து வைத்திருந்தார்.

அதுவல்லவா தலைமைப் பண்புகளில் ஒன்று. இன்றைய தமிழினத்தின் தலைமைகளுடன் அதனை ஒப்பிட்டுப் பாருங்கள் கம்பவாரிதி அவர்களே! பல உண்மைகள் உங்களுக்குப் புலப்படும்.

தற்போதுள்ள தலைமைக்குப் பக்கதிலே நிற்கின்ற சிங்கள மெய்பாதுகாவலர்களே கட்சித் தொண்டர்கள் பெயரைத் தலைமைக்கு ஞாபகப்படுத்திச் சொல்லிக் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை காணப்படுகிறது.

அதுமட்டுல்ல அவரை காக்கா அண்ணருக்கு 'உங்கள் தலைவர்' எனக் குறிப்பிட்டதன் மூலம் தற்போது உங்கள் தலைவர் யாரென்பதையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

கம்பவாரிதி அவர்களே இனித் தன்மையிலும், முன்னிலையிலும் பேசலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் தலைவர் இன்றிருந்தால்... எனவொரு வினாவையும் எழுப்பியிருந்ததுடன்; அதற்கான பதிலையும் கூடக் குறிப்பிட்டிருந்தீர்கள்...

என் கருத்துப்படி, அவர் இன்றிருப்பாரேயானால் உண்மையில் இந்தத் தலைக்கனம் பிடித்த பதவிப் பக்தர்களைப் பல்லக்கில் தூக்கிக் காவ வேண்டிய அவல நிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்காது.

ஆதனைப் பார்த்துச் சகித்துக் கொள்ள வேண்டிய அருவருப்பான நிலை மக்களுக்கும் ஏற்பட்டிருக்காது என்றே நினைக்கிறேன்.

அநீதிக்கெதிரான வன்முறைக்கெதிரான சமூக அநீதிக்கெதிரான நியாயமற்ற கொடுங்கோல் அரசுக் கெதிரான தர்மயுத்தம் பற்றி பேசும் காப்பியம் தானே.... இராமாயணம்.

இராவணனுக்கு எதிராக இராமன் மேற்கொண்ட நடவடிக்கையைப் பயங்கரவாத - வன்முறை நடவடிக்கை என எவரும் (சுமந்திரனே கூட) வர்ணித்தால் கம்பவாரிதியாகிய உங்களுக்கு வருவது வெறுப்பா? கோபமா? எதுவாக இருக்கலாம்?

அதே கோபம் தான் எமது இன விடுதலைப் போராட்டத்தை அதில் மக்களின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பை, இளைய தலைமுறையினரின் ஒப்பற்ற தியாகத்தை - வன்முறை எனச் சுமந்திரன் அவர்கள் குறிப்பிட்டு தான் வன்முறைக்கு எதிரானவன் எனப் பிரகடனம் செய்வதை எந்த உணர்வுள்ள தமிழ் மகனும் கைதட்டி வரவேற்க மாட்டான்.

'வன்முறையை விரும்பவில்லை' என்ற வார்த்தைகள், இது சுமந்திரனுக்கு அவரது அற்பத்தனமான அரசியல் அபிலாஷைகளுக்கு அநுகூலமாக இருக்கக் கூடிய தேர்தல் பிரச்சார வார்த்தைகளாக இருக்கலாம்... இனமானமுள்ள தமிழனுக்கு அவனது ஆத்மாவில் ஏற்படுத்திய ஆறாவடு - தீராவலியாகவே என்றும் இருக்கும்.

வன்முறையாளருக்கு ஆதரவில்லை எனப் பகிரங்கமாகக் கூறிவிட்டு அதே வன்முறையாளரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைந்து அதிகாரப் பதவியில் ஒட்டிக்கொண்டதும், தொடர்ந்து ஒட்டிக் கொள்ள முனைந்து நிற்பதும் சுமந்திரன் என்ற மென்முறையாளனுக்கு அழகில்லையே! கௌரவமில்லையே...!

துணிந்து சுயேட்சையாகவோ, தனியானதொரு கட்சி தொடங்கியோ அல்லது தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் இருந்து பிரித்துக் கொண்டுபோய் தனியாக தேர்தலில் போட்டியிட வைத்துச் சாதித்து காட்டியிருக்கலாமே!

மாட்டார். முடியாது. ஏனெனில் தேர்தல் வெற்றிக்கு வன்முறையாளர்களின் கூடாரமும் வேண்டும். ஆதரவும் வேண்டும்... வெட்கமாக இல்லையா? தேசியத் தலைவர் பிரபாகரனையும், ஊடகப் பேச்சாளர் சுமந்திரனையும் ஒப்பிட்டதாக கூறப்படும் விடயம் குறித்துச் சில வார்த்தைகள்....

'நீங்கள் இவ்விருவரையும் ஒப்பிடவுமில்லை ஒப்பிடவும் மாட்டேன்.' என எழுதியிருந்தீர்கள். நன்றி. ஆனால் இவ்விருவரதும் காலத்தேவையைத் தான் ஒப்பீடு செய்தேன் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

அந்தக் காலத் தேவை பற்றிப் பேசலாம். தலைவர் பிரபாகரனின் காலத் தேவை உலகறிந்த விடயம். நான்கு தசாப்த கால தமிழரின் வரலாற்றோடு ஒன்றிக் கலந்ததே அவரது வரலாறும்...

ஆனால் சுமந்திரனின் காலத்தேவை என நீஙகள் குறிப்பிட்டது தான் என்னவென்று விளங்கவில்லை. அவர் காலத்தேவையென வர்ணிக்கும் அளவுக்குத் தமிழ்த் தேசிய - இனத்துவ வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாக எத்தனை அத்தியாங்;களில் தன்னை அழுத்தமாக, முத்திரை பதித்துள்ளார் கூறுங்கள்.

2009 இற்குப் பின்னரே அவர் சமூகம் மக்களுக்கு வெளிச்சமாகிறது. அவர் தமிழரசுக்கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அல்ல) கட்சித் தேவை கருதிக் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டதான பதிவுகளைத் தான் காணமுடிகிறதே ஒழிய ஒரு இனத்தின் உரிமை பற்றியோ அல்லது அதற்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றியோ பேச வந்ததாக இல்லை.

சில சமயங்களில் கட்சியைச் சீரமைப்பதற்காகச் சம்பந்தர் அவரைக் கொண்டுவந்ததாக ஒப்புக் கொள்ளலாம். இப்படிச் சொல்வதால் நீங்கள் உணர்ச்சி வசப்படவேண்டாம்.

ஒருவனது பிறப்பின் காலத்தேவையை காலம் தான் வரலாற்றில் அடையாளப்படுத்தும். பிரபாகரனின் காலத்தேவை எப்போதோ தமிழினத்தால் உணரப்பட்டும் விட்டது. காலம் அதனை உணர்த்தியும் விட்டது.

தற்போது பிரபாகரன் இல்லாத சூழலில் அவரது தேவை மிக அதிக அளவில் உணரப்பட்டுக் கொண்டிருப்பதும் கண்கூடு... சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் போதும், மக்கள் பாதுகாப்பும், சுய மரியாதையும் கேள்விக் குறியாக்கப்படும் சமயங்களிலும் மக்கள் 'அவர்கள் இருந்திருந்தால்..?' என்ற அந்த வார்த்தைகளை உச்சரிப்பதைக் கேட்கக் கூடியதாக இருக்கிறது தலைமையும், மக்கள் பாதுகாப்புப் பற்றியும் நீங்கள் தமிழ் நாட்டில் பேசிய யூ- டியுப் காணொளியே இதற்குச் சாட்சியாகும்.

இனவழிப்பு தொடர்பான வடமாகாண சபையின் பிரேரணை பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். சபையில் விடாப்பிடியாக நின்று முன்மொழிந்து அது நிறைவேற 'விடாக்கண்டனாக' நின்றவர் திரு.சிவாஜிலிங்கம் அவர்களே... இதில் சாமியாருக்கும் சம்பந்தமில்லை, சம்பந்தருக்கும் உடன்பாடில்லை என்பது ஒன்றும் ரகசியமேயில்லை.

சாமியாரும், சம்பந்தனும் அதற்குத் தடையாக நின்றதைப் பலரும் அறிவர். இது குறித்து திரு. சிவாஜிலிங்கம் அவர்களைக் கேட்டாலே அனைத்தும் விளக்கமாக கூறுவார்.

அடுத்தது - உங்களுக்கும் (கம்பன் கழகத்திற்கும்) முன்னாள் முதலமைச்சருக்குமிடயிலான உறவுகள் தொடர்புகள், முறிவுகள் பற்றிய அது பற்றிய கருத்தாடல்களின் மீதானவை. அது என்னைப் பொறுத்தவரை உங்களின் சொந்த விவகாரங்கள்.

முன்னாள் முதலமைச்சரை அரசியலுக்குள் நுழைய வழிவகுத்தவர்களில் ஒருவராகப் பலராலும் பரவலாக பேசப்படும் நீங்கள் அவரைப் பற்றியும் அவரது அரசியல் நகர்வுகள் பற்றியும், அணுகுமுறைகள் ஏற்பாடுகள், முரண்பாடுகள், உள்நோக்கங்கள் என அனைத்தைப் பற்றி ஒரு பெரும் விபரப் பட்டியல் தந்துள்ளீர்கள். அறியா விபரங்கள் சிலவற்றை அறிந்துள்ளீர்கள். நன்றி!

முன்னாள் முதலமைச்சரின் அரசியல் நுழைவாயில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினூடாகத்தான் இருந்தது. கூட்டமைப்பு என்பது அவரது அணியினரின் அரசியல் விலாசமாக மட்டும் தான் இருந்தது.

தமிழரசுக்கட்சி என்ற வீட்டுக்குள் நுழைந்த பின்னரே நீதியரசராக இருந்தவர் வெறும் அரசியல்வாதியானர். அரசியலில் அவர் ஆரம்ப வகுப்பை மட்டுமல்ல. ஓரளவு பட்டப்படிப்பையும் முடித்தது சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றோரிடம் தான். 'அகரத்தை கற்றுக் கொடுத்தவர்களே அவரைச் சிகரத்தையும் தொடவைத்தனர்.' அவர்கள் கற்றுக் கொடுத்த அரசியல் மூலோபாயங்களையே அவர் அவர்களுக்கு எதிராகவும் கையாளுகிறார் என்று கூறலாம் தானே...!

அவரது கருத்தையும் நிலைப்பாட்டையும் கொச்சைப்படுத்தும் முகமாக காக்கா அண்ணரை அரியாலை மனிதனாக கொச்சைப் படுத்தியது மிகத் தவறாகும் தமிழ் சமூகத்தால் கௌரவமாக நோக்கப்படும் தங்களிடமிருந்து இந்தக் கருத்து வந்திருக்கவே கூடாது.

வடக்கின் முன்னாள் முதல்வருக்கு சார்பானவராக மனோகரை (காக்கா அண்ணரை) வெளியுலகிற்கு காட்ட முனைந்துள்ளீர்கள்.இது தவறல்லவா? அவர் அவ்வாறானவர் அல்ல அவர் முன்னாள் முதல்வருக்குச் சார்பானவர் என்றால் அவரது பெயரைச் சொல்லி அவருக்கு வாக்களிக்குமாறல்லவா கூறியிருப்பார்?

அத்துடன் அவர் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கூறவில்லையே! இனத்துரோகி சுமந்திரனை விட வேறு எவருக்காவது வாக்களியுங்கள் என்றே மாவீரர்;- போராளி குடும்பங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மாவீரர் - போரளிகள் குடும்பப் பட்டியலுக்குள் அடங்காதோரே (தாங்கள் உட்பட) வீணாகக் குத்தி முறிகின்றனர்.

ஒரு விடயம்பற்றி அவசர முடிவெடுப்பதும், அது பற்றி உடனடியாக உணர்ச்சிவசப்பட்டுக் கருத்துக் கூறுவதும் தவறென்பதை உங்கள் அனுபவத்திற்கூடாகவே சொல்லலாம்.

இந்திய விமானப்படையினர் இலங்கை வான் பரப்பக்குள் அத்துமீறி உணவுப் பொட்டலங்களை யாழ்.குடநாட்டுக்குள் வீசிய போது அதைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு தாங்கள் 'வந்தே மாதரம் என்போம்.

அது வந்தே 'மா' தரும் என்போம்' என்று எழுதிய வரிகள். அடுத்து வந்த சில நாட்களிலே யாழ்; மக்களுக்கு மிகவும் கசப்பான அனுபவத்தைக் கொடுத்ததும், நீங்கள் உட்பட பலர் நல்லூர்; கேணியடியில் உணவுக்காகக் காத்திருந்த சம்பவமும் மேற் சொன்னதுக்கு உதாரணமாகலாம்.

இந்த இடத்தில் முன்னாள் முதலமைச்சரை நல்லவர், வல்லவர் என்று சொன்னதையும் பின்னர் குறைபட்டதையும் ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும். ஒரு இடத்தில் சுமந்திரனிலும் ஒரு சில தவறு இருக்கலாம் என இழுக்கிறீர்களே... இருக்கு என உறுதியாக கூறவிடாமல் தடுப்பது எது? தற்போதைய தங்கள் தலைவர் மீதான விசுவாசம் தானே...!

விக்னேஸ்வரன் ஐயாவுடன் ஒப்பிடும் போது சுமந்திரன் வானளாவ உயர்ந்து நிற்கிறார் எனக் கூறி பிரம்மித்துள்ளீர்களே... உண்மைதான் தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் விடயத்தில் அவர் அப்படித்தான் வானளாவ உயர்ந்துதான் இருக்கிறார்.... உங்களின் தர மதிப்பீட்டுக்கு ஒரு பாராட்டு

தற்காலச் சூழலில் மனோகருக்குப் நீங்கள் பதிலளித்த விரைவை விடவும், வேகமாகவும், கோபமாகவும், மட்டுமல்ல இனம் மொழி சார் அக்கறையுடனும், பொறுப்புணர்வுடன் பதில் சொல்லி பலரின் வாயை அடைக்க வேண்டிய பல விடயங்கள் உங்கள் முன் குவிந்து கிடக்கின்றன. அவைக்குப் பதிலளிப்பதற்குச் சிறந்தவரென தமிழ் மக்கள் தங்களையே குறிப்பிடுகின்றனர்.

இராமாயணம் ஒரு கற்பிதம், இராமன் ஒரு முஸ்லீம். இராவணன் என்றொருவர் இல்லவே இல்லை. அது ஒரு மாயை, கோணேஸ்வரத்தின் வரலாறே வேறு... சீதை கூட ஒரு முஸ்லீம் பெண்ணே... சுலைமான் தான் அநுமான் ஆக்கப்பட்டார்... இப்படி எண்ணற்ற அறிவிப்புகள் எம்மினத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கி விட்டுள்ள நிலையில், இவற்றிற்கெல்லாம் உரிய ஆதாரங்களுடன் பதில் அறிக்கை விட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.

சுமந்திரனை நியாயப்படுத்துவதை விடவும் இராமனை இராவணரை, சீதையை, அநுமானைப்... பாதுகாத்து - தமிழினத்தின் உயரிய பொக்கிஷமான இராமாயணத்தை கொச்சைப்படுத்துவோருக்கு உரிய பதிலடி கொடுப்பதே உங்களின் இனம்சார் - மொழிசார் வரலாற்று உரிமையாகும். தவறின் இராமாயணம், மகாவசம்சத்தின் ஒரு அங்கமாக்கப்பட்டுவிடும் கேவலம் நேரிடலாம்...

கம்பர் கூடத் தமிழறிந்த பௌத்தராக்கப்பட்டுவிட்டார்... போகிற போக்கில் இராவணன் ஓதியது சாம கீதமல்ல குர் - ஆன் தான் என ஒருவர் ஆதாரம் காட்டுவார்... இவற்றை மீறிப் போகும் போது சில வருடங்களில் இராவணன் சிங்கள அரசானா - முஸ்லிம் கலீபாவா என்ற பட்டிமண்டபம் ஒன்றை யாரோ ஒருவர் ஏற்பாடு செய்து அதில் உங்களை நடுவராக இருத்தும் அவலமும் கூட ஏற்படலாம். அந்தப் பொறுப்பை ஏற்க உங்கள் மீது அழுத்தம் மேற்கொள்ளப்படலாம்...

இது ஒருபோதும் சாத்தியமாகாது, பாதுகாக்க உங்கள் எழுத்து ஆயுதமாக்கப்பட வேண்டும்! மன்னவனும் நீயோ, வள நாடும் உனதோ.... என நெஞ்சு நிமிர்த்திப் பாடிய கம்பனின் தமிழை அடியொற்றித் தமிழ்ப் பரவச் செய்ய வேண்டிய கம்பவாரதி இருந்தால் அது தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை... அதனை விட்டுச் சுமந்திரனைத் தூக்கவும்,விக்னேஸ்வரனைத் தாக்கவும் தாங்கள் தமிழை பயன்படுத்தத் தேவையே இல்லை...!

அவர்கள் தமிழே அவர்களைப் பாதுகாக்கும் அல்லது தண்டிக்கும்....

பாண் போடத்தெரிந்த ஒருவன் பேக்கரி வைக்கலாம். அது அவனுக்குப் பலமும், அதிக பொருளையும் ஈட்டிக் கொடுக்கும். ஆனால் அவன் சிகை அலங்காரக் கடை வைக்க முயலக் கூடாது.

அம் முயற்சி அவனை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லலாம். இந்த இடத்தில் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய மாத்திரைக் கதையின் தலைப்பே ஞாபகத்துக்கு வருகிறது. 'மணி கட்டிய மாடு மதில் தாண்டினால் கேடு' என தெரிவிக்கப்பட்டுள்ளது.