மட்டக்களப்பில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 13 பேர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பில் தேர்தல் விதிமுறைகளை மீறி வீதியில் வாகனங்களில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது 4 டொல்பின் ரக வான்களும், 7 மோட்டர் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சாணக்கியன் தலைமையில் கட்சி ஆதரவாளர்கள் சம்பவ தினமான இன்று காலை 9 மணியளவில் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வாகனங்கள் மோட்டர் சைக்கிள்களில் பவனியாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பொலிஸார் அவர்களை தடுத்துநிறுத்திய போது அதில் பொலிஸாருக்கும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 13 பேரை பொலிஸார் கைது செய்த நிலையில் ஏனையோர் வாகனங்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்களை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து 4 வான்கள், 7 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.