நேர்மையான வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள்! யாழ்.மாவட்ட ஆயர் கோரிக்கை

Report Print Sumi in சமூகம்

தமது நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கள் என யாழ்.மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை அடையும் வேளை பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துங்கள். முதலில் வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளர்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

கொரோனாவிற்குப் பயந்து வாக்களிக்கப் போகாது விடவேண்டாம். வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும். பிழையாக வாக்களிக்காது பதட்டமின்றி சரியான விதமாக வாக்களியுங்கள்.

சுகாதார அறிவுறுத்தற்படி முகக்கவசங்களை அணிந்து நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று, சமூக இடைவெளியைப் பேணி வாக்களித்து விட்டு விரைவாக வீடுகளுக்குச் செல்லுங்கள்.

வாக்களிப்பு நிலையங்களில் பணிபுரிவோர் விசேட விதமாக இவற்றைக் கவனித்து வேகமாகச் செயலாற்றுங்கள்.

யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை ஒவ்வொருவரும் எவரது தலையீடோ தூண்டுதலோ இன்றி சுயமாகவும் சுதந்திரமாகவும் எடுக்கவேண்டும்.

தமது நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கள்.

தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு இத்தேர்தல் முடிவுகள் வழிவகுக்க இறையாசீர் வேண்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.