இலங்கையில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்றாளரான தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் இந்த தாய் தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளதுடன் சத்திர சிகிச்சையில் 35 மருத்துவர்கள் பங்கெடுத்துள்ளனர்.
துபாய் நாட்டில் இருந்து கடந்த 10 ஆம் திகதி இலங்கை வந்த இந்த கர்ப்பிணி தாய், கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கடந்த 21 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து மருத்துவர்கள் அவரை கொரோனா வைரஸ் தொற்றிய கர்ப்பிணி தாய்மாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொழும்பு கிழக்கு வைத்தியசாலையின் விசேட பிரிவில் அனுமதித்துள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 31 ஆம் திகதி பிரசவ வேதனை ஏற்பட்டுள்ளது.

இந்த பெண் கொரோனா வைரஸ் தொற்றாளர் என்பதால், கவனமாக பிரசவத்தை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். தாயிடம் இருந்து வைரஸ் வெளியில் பரவாமல் தடுப்பது மருத்துவர்கள் எதிர்நோக்கிய பிரதான சவாலாக இருந்தது.
இதனால், 35 மருத்துவர்கள் இணைந்து சிசேரியன் சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளதுடன் வெற்றிகரமாக அதனை செய்து முடித்துள்ளனர்.
இதனடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றிய தாய் ஒருவர் முதல் முறையாக இலங்கையில் குழந்தையை பிரசவித்துள்ளார்.
குழந்தை ஆரோக்கியமான இருந்தாலும் குழந்தையின் எச்சில் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதா என பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைகளின் நிறைவில் அக்குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாயும் குழந்தையும் தனியான அறையில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் மிகவும் பாதுகாப்பான சுகாதார முறையில் அவர்களை மருத்துவ ரீதியாக அணுகி வருகின்றனர்.