தாயை இழந்த சோகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்! மட்டக்களப்பில் சம்பவம்

Report Print Murali Murali in சமூகம்

தாய் உயிரிழந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் தன்னுயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உருக்குலைந்த நிலையில் 28 வயது இளைஞன் ஒருவனின் சடலத்தை தாம் காட்டுக்குள்ளிருந்து மீட்டெடுத்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேச அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்து நேற்று இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வடிச்சல் வீதி கித்துள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த இளைஞனின் தாய் மாரடைப்புக் காரணமாக மரணித்துள்ளார்.

தாயின் பிரிவால் துயரம் தாளாது துவண்டு போயிருந்த இளைஞன் கடந்த 21 ஆம் திகதி தாயின் இறுதிக் கிரிகைகளை நிறைவேற்றிய சந்தர்ப்பத்தில் “உன் பாசத்தை இழந்து தனித்திருக்க நான் விரும்பவில்லை.

நானும் உன் பின்னால் வருவேனம்மா” எனக் கூறி அவரது பிரிவால் மிகவும் துவண்டுப்போயிருந்தார். தாயின் இறுதிக் கிரியைகளை நிறைவேற்றிய இளைஞன் அதன் பின்னர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்களில் வெளியேறிச் சென்றுள்ளார்.

எங்காவது தொழிலுக்குச் சென்றிருப்பார், தொழில் செய்து முடிந்து வந்து விடுவார், என உறவினர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் கடந்த சனிக்கிழமை அவரது சடலத்தையே மீட்க முடிந்திருக்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை கித்துள் காட்டுப் பகுதிக்குச் சென்ற உறவினர்களில் ஒருவர் இந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் காட்டிற்குள் கிடப்பதை அவதானித்து அதனருகே சென்றபோது அவ்விடத்தில் இளைஞனின் சடலமும் அவ்விளைஞன் பாவித்த செருப்பு, தலைக்கவசம் என்பனவும் காணப்பட்டுள்ளது.

உடனடியாக இவ்விடயம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதின் பேரில் ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.