தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க முடியாது!

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க இதனை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா சந்தேகத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருப்பவர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல்கள் ஆணையகத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்படுத்தலை முடித்தவர்கள் மேலும் 14 நாட்கள் வீட்டில் தங்குமாறு கேட்கப்படுகின்றார்கள்.

அவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கமுடியும் என்று அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏனைய வாக்காளர்கள் வாக்களித்து விட்டு சென்ற பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் வாக்களிக்க செல்வதற்காக பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம்.

குடும்ப உறுப்பினர்களுடன் தங்கள் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்தி வாக்குச் சாவடிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜாசிங்க கூறினார்.

இரண்டு பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள் என்று ஜாசிங்க தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 800க்கும் குறைவானவர்கள் இருப்பதாகவும், அவர்களில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.