அங்கொட லொக்கா குறித்து தமிழக புலனாய்வுத்துறை விசாரணை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் பாதாள உலக முக்கியஸ்தரான அங்கொட லொக்கா என்ற மத்துகே லசந்த சந்தன பெரேரா, தமிழகம் கோயம்புத்தூரில் மரணமானமை தொடர்பில் தமிழக குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அங்கொட லொக்கா வேறு ஒரு பெயரில் கோயம்புத்தூரில் மற்றும் ஒரு இலங்கை பெண்ணுடன் தங்கியிருந்த நிலையிலேயே கடந்த ஜூன் 2ம் திகதி மரணமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அவர் கோயம்புத்தூரில் இந்திய பொதுமகன் என்ற வகையில் தங்கியிருந்தமைக்கான போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டமை தொடர்பிலும் தமிழக குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அங்கொட லொக்கா தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டபோது அவரின் போதுமான பணம் இருந்தமை கண்டறியப்பட்டது. எனினும் அவர் அங்கு எவ்வித தொழில்களிலும் ஈடுபடவில்லை என்று தெரியவந்துள்ளது. அத்துடன் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து ஆயுதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதேவேளை அங்கொட லொக்காவுடன் தங்கியிருந்ததாக கூறப்படும் கொழும்பை சேர்ந்த 27அகவையைக்கொண்ட தாஞ்சி என்ற பெண, அங்கொட லொக்காவை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கோயம்புத்தூரில் சென்று சந்தித்து வந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் கடந்த மார்ச் மாதம் அவர் கோயம்புத்தூர் சென்றிருந்தபோது கொரோனா பரவல் காரணமாக அவரால் மீண்டும் இலங்கைக்கு திரும்ப முடியாமல் போனது.

இந்நிலையில் தாஞ்சியின் கணவர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டதாகவும் அந்தக்கொலையில் அங்கொட லொக்காவுக்கு தொடர்பிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்காரணமாகவே முன்னதாக அங்கொட லொக்கா இந்தியாவில் மரணமானதாக வெளியான தகவலின்போது அவர் எதிரணியைச் சேர்ந்தர்களின் சூழ்ச்சியின் கீழ் பெண் ஒருவரால் நஞ்சூட்டிக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.