பிழையான முகவரி - வாக்காளர் அட்டைகளை நிராகரித்த திருகோணமலை மக்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்துக்கு கீழ்வரும் முன்னம்படிவெட்டை கிராம மக்களின் வாக்காளர் அட்டையில் முகவரி பிழையாக அச்சடிக்கப்பட்டுள்ளமையால் 247 வாக்காளர் அட்டைகளையும் அந்த மக்கள் நிராகரித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் முன்னம்படிவெட்டை கிராம மக்களின் வாக்கு சீட்டுக்களில் முகவரி பிழையாகவே அச்சடிக்கப்பட்டுவந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் பல தடவை முறையிட்டிருந்த போதிலும் இதுவரைக்கும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட வாக்காளர் படிவத்தில் தமது தேசிய அடையாள அட்டையில் இருக்கும் முகவரியையே தாம் பதிவிட்டதாகவும் எனினும் தற்போது தமது வாக்காளர் அட்டைகளில் தாம் பதிவிட்ட முகவரி இடம்பெறவில்லை என்று முன்னம்படிவெட்டை மக்கள் தெரிவித்துள்ளனர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு, முன்னம்படிவெட்டை, பாலத்தடிச்சேனை, மூதூர் என்பதற்கு பதிலாக பாலத்தடிச்சேனை, தோப்பூர் எனவும் பிழையாக முகவரிகள் வாக்காளர் அட்டைகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன.