குருணாகல் மேயர் உட்பட 5 பேரை கைது செய்யுமாறு உத்தரவு

Report Print Steephen Steephen in சமூகம்

குருணாகல் மேயர், மாநகர ஆணையாளர், மாநகர சபையின் பிரதான பொறியியலாளர் மற்றும் மேலும் இருவரை கைது செய்ய நீதிமன்ற பிடியாணையை பெற்று, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குருணாகல் நகரில் உள்ள 13ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது புவனேகபாகு மன்னனின் அரச சபை இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இவர்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கட்டடம் 1940 இலக்கம் 9 தொல்லியல் கட்டளைச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட தொல்லியல் நினைவிடம். இந்த கட்டடம் கடந்த மாதம் 14ஆம் திகதி இடிக்கப்பட்டது.

இதனிடையே குறித்த கட்டடம் சம்பந்தமான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு குருணாகல் நீதவான் நீதிமன்றம், குருணாகல் மேயருக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குருணாகல் நகர அபிவிருத்திக் குழு கூட்டம் சம்பந்தமான ஆவணங்கள், கூட்ட பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு நீதிமன்றம், வடமேல் மாகாண ஆளுநருக்கும் உத்தரவிட்டுள்ளது.