கிண்ணியாவில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (06) 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டவர் கிண்ணியா பூவரசம்பூ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அப்துல் மனாப் முஹம்மத் சப்பான் (25வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையொன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காட்டிக் கொடுத்ததால் கோபம் கொண்ட வேளையில் இவரை நேற்றிரவு வாளால் வெட்டிக் காயப்படுத்திய நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெட்டி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களை தற்பொழுது கைது செய்துள்ளதாகவும்,புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையை திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் மலிந்த டி சில்வா மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை கொலை செய்யப்பட்ட நபரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.