11 மாணவர்களின் விபத்து தொடர்பில் பொலிஸார் வௌியிட்டுள்ள முக்கிய தகவல்!

Report Print Ajith Ajith in சமூகம்

மாணவர் ஒருவரின் மரணத்துக்கு காரணமாகி 11 பேரைக் காயப்படுத்திய வாகனச்சாரதியின் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலனறுவை - அரலங்கங்வில பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் தொடர்புடைய சாரதியின் மீதே இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது 16அகவையைக்கொண்ட மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். 14 முதல் 16அகவைகளை உடைய 11 மாணவர்கள் இதன்போது காயமடைந்தனர்.

இந்தநிலையில் விபத்தில் தொடர்புடைய சாரதி இன்று பொலனறுவை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை ஆகஸ்ட் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட சுவாசப்பரிசோதனையின்போது அவர் விபத்தின்போது மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையிலேயே குறித்த சாரதியின் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த வாரப்பகுதிகளில் மாத்தறையில் பொலிஸ் உறுப்பினர் ஒருவரை மோதி அவரின் மரணத்துக்கு காரணமாக இருந்த வாகன சாரதி, நுகேகொடை மேம்பாலத்தில் வாகனத்தை மோதி படைவீரர் ஒருவரின் கொலைக்கு காரணமான சாரதி ஆகியோருக்கு எதிராகவும் கொலைக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.