மட்டக்களப்பு மாநகர சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தும் ஆரம்பம்

Report Print Kumar in சமூகம்

தேர்தல் காலம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகர சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சப்பிரிகம திட்டத்தின் மூலமாக இன்று நடைபெறும் பூநொச்சிமுனை மதகு வேலைத்திட்டம், கல்லடி போக்கடிவீதி வடிகான் அமைப்பு மற்றும் வீதி புனரமைப்பு, கல்லடி எட்டாம் குறுக்கு வடிகான் அமைப்பு, புதூர் திமிலைதீவு வீதி புனரமைப்பு ஆகிய வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் களவிஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.

குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக முதல்வர் தி.சரவணபவன் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல் காலம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகர சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சப்பிரிகம திட்டத்தின் மூலமாக நடைபெறும் அபிவிருத்தி வேலைகளை நேரில் சென்று பார்வையிடப்பட்டது.

மேலும் "மண் வீதியில்லாத மாநகரத்தினை நோக்கி" எனும் திட்டத்தினை ஆரம்பிக்க இருப்பதுடன்,அதன் மூலம் கிராமங்களில் இருக்கின்ற மண் வீதிகளை முதல் கட்டமாக கிரவல் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்கு இருக்கின்றோம்.

மேலும் மட்டக்களப்பு நூலகமானது அதன் கட்டுமான செயற்பாடுகள் இடை நடுவே நிறுத்தப்பட்டிருந்தாலும் அதனை அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்ட நிலையில் தேர்தலுக்கு முன்பாக கபினட் கொள்முதல் குழு ( cabinet Procurement committee)அதனை அங்கீகரித்துள்ளது. மிக விரைவில் அது ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதே போல் மாநகரசபை ஆரம்பித்து இருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியினுடைய 1800 மில்லியன் செலவிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான களவிஜயத்தின் போது மாநகர உறுப்பினர் பூபாலராஜா மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.