வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்! வைத்தியசாலையில் அனுமதி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று இரவு நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியும், சமூக சேவகருமான வி.விநோதரன் என்பவர் மீதே அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் சமூக சேவை அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு உட்புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த முன்னாள் போராளி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதுடன் அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

முன்னாள் போராளி மீதான தாக்குதல் தொடர்பாக அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முதலுதவியாளர்கள் படுகாயமடைந்த முன்னாள் போராளியை வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.