காட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் காட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வன இலாக்கா அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் காட்டுப் பகுதிக்குச் சென்று மரக்கிளைகளை வெட்டி காட்டு புளியம்பழங்கள் பறித்து கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டதாகவும் வன இலாக்கா அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மஹதிவுல்வெவ குளத்துக்கு மேலே உள்ள காட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும் குறித்த அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் தாம் வருடத்துக்கு ஒருமுறை காட்டு பழங்களை பறித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதாக, காட்டுப்பகுதிக்கோ அல்லது மரங்களுக்கோ சேதம் ஏற்படாத வகையில் புளியம் பழங்களை பறித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அனுமதிப்பத்திரம் இல்லாமல் காட்டுப் பகுதிக்குச் சென்ற குறித்த ஒன்பது சந்தேகநபர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு இலாகா அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.