மானிப்பாயில் வாளை காட்டி அச்சுறுத்தி கொள்ளை! பெண் உட்பட எட்டு பேர் கைது

Report Print Sumi in சமூகம்

மானிப்பாய் பகுதியில் நள்ளிரவு வேளையில் வாளை காட்டி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 16 பவுண் நகைகளை கொள்ளையடித்த குற்றத்தில் பெண் உட்பட எட்டு சந்தேக நபர்களை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பகுதியில் கடந்த மாதம் 21ம் திகதி நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்தவர்களை வாளினைக் காட்டி அச்சுறுத்தி வீட்டில் இருந்த 16 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நவாலி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை கைது செய்து விசாரணை செய்தபோது அவரிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபருக்கு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் உட்பட 8 பேர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் நகைகளில் 12 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தபட்டதாக கூறப்படும் வாள்,மோட்டார் சைக்கிள் போன்றவற்றை யும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்,சங்கானை,பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.