பற்றைக்காடாய் காட்சியளிக்கும் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவாலயம்

Report Print Sumi in சமூகம்

வரலாற்று ஆவணமாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 9 பேரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவாலயம் புற்கள் வளர்ந்து பற்றைக் காடாய் காட்சியளிக்கின்றது.

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் வந்து தமது நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொள்வதோடு குறித்த பகுதியினை தூய்மையாக பேணுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

குறித்த நினைவாலய பகுதியானது யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகும்.

எனினும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள யாழ்ப்பாண மாநகரசபை கூட தமிழாராய்ச்சி மாநாடு நினைவாலயத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படவில்லை என பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் புற்கள் வளர்ந்து பற்றையாக காணப்படுகின்ற நிலையில் நினைவேந்தல் தினங்களில் மட்டும் அந்த இடத்திற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது அமைப்புக்கள் வந்து போராட்டங்கள் மற்றும் நினைவேந்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நினைவாலயத்தில் பெயர் பலகை கூட சேதமடைந்து துருப்பிடித்து உக்கிய நிலையில் காணப்படுகின்றது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள யாழ். நகரத்தின் மத்தியில் காணப்படும் குறித்த இடத்தினை தூய்மையாக்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாநகரசபை நடவடிக்கை எடுக்குமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்?

நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் குறித்த நினைவாலயம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமும் அதற்கான நினைவேந்தல் நிகழ்வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.