வவுனியாவில் சர்ச்சையை கிளப்பும் விடயங்கள்: நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தீர்மானம்

Report Print Theesan in சமூகம்
198Shares

வவுனியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள இரு வேறு விடயங்கள் தொடர்பில் பல தரப்பாலும் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு. திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நகரசபையின் செயற்பாடுகள் விடயம் தொடர்பாக அவர் நேற்றையதினம்‌ கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் அண்மையில் பண்டாரவன்னியன் சிலைக்கு படிக்கட்டுகள் நகரசபையால் கட்டப்பட்டமை மற்றும் வவுனியா குளத்தில் பூங்கா அமைக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இவ் இரு விடயங்களைப் பற்றியும் பலர் எனது கவனத்திற்கு தனிப்பட்ட முறையிலும் அமைப்புக்கள் ரீதியில் தெரியப்படுத்தியுள்ளனர்.

வவுனியாவில் முக்கிய அமைப்புக்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் குறித்த இரு விடயங்களும் தவறானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயங்களில் நான் அதிக அக்கறை செலுத்தி தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்.

ஒருங்கிணைப்பு குழுவிலும் இவ் விடயங்கள் நிச்சயமாக ஆராயப்படும்.

திணைக்களங்களின் தலைவர்கள் இவ் விடயத்தில் தவறாக நடந்திருந்தால் அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும் என கூறியுள்ளார்.