கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவராக தேடப்பட்டு வந்த “சாவனா” என்றழைக்கப்படும் மொஹமட் தாஜூதீன் மொஹமட் ஷாஹுல் ஹமீட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் வைத்து அவர் இன்று சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஆயுப்கான், திகாபைஸர், ஆனமாலு இம்தியாஸ் மற்றும் குலிபல் இம்தியாஸ் ஆகிய குற்றச்செயல் குழுக்களுடன் செயற்பட்டு வந்தவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறப்பு அதிரடிப்படையினரின் தகவல்படி, கைது செய்யப்பட்டவர் 2001ஆம் ஆண்டில் கொழும்பில் சண்முகம் சுந்தரராஜா மற்றும் தியாகராஜா, இடி என்றழைக்கப்பட்ட மொஹமட் பாரூக் மொஹமட் சித்தீக், வாழைத்தோட்ட சமந்த தில்ஹார, புறக்கோட்டையின் அப்துல் ஹமீர் மொஹமட் இனாமி ஆகியோர் கொலை சம்பவங்களில் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது.
2005ஆம் ஆண்டு கிராண்ட்பாஸில் ஆனந்த ஜெயதிஸ்ஸ என்பவரின் கொலையிலும் இவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது என கூறப்படுகிறது.
அத்துடன் 2001ஆம் ஆண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை, 2003இல் ஒருவரை கடத்தி அவரிடம் இருந்து 21ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டமை போன்ற சம்பவங்களிலும் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள “சாவனா” என்றழைக்கப்படும் மொஹமட் தாஜூதீன் மொஹமட் ஷாஹுல் ஹமீட் மாளிகாவத்தை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.