மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 113 குடும்பங்கள் பாதிப்பு

Report Print Ashik in சமூகம்
85Shares

மன்னார் மாவட்டத்தில் இன்று அதிகாலை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதோடு, உடமைகளுக்கும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 113 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 146 பேரும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக வீடுகள் சேதமாகியுள்ளதோடு மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் பொது இடங்களிலும், உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதேசச் செயலாளர்கள் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள், கிராம அலுவலகர்கள் சென்று பார்வையிட்டதோடு, மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.