திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Report Print Varunan in சமூகம்

அம்பாறை - திருக்கோவில்,பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இல்மனைட் அகழ்வுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டாம் என தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இல்மனைட் அகழ்வுக்கு எதிராக திருக்கோவில் மற்றும் தாண்டியடி மக்கள் எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று தாண்டியடி பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து பிரதான வீதியாக பேரணியாக சென்று தாண்டியடி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பான இருந்து வாகன பேரணியாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை பேரணி சென்றுள்ளது.

திருக்கோவில் பிரதேசத்தில் 2018ம் ஆண்டு இல்மனைட் அகழ்வுக்கான முன்னெடுப்புக்கள் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டு இருந்த வேளை, அப்போது மக்கள் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்த நிலையில் இல்மனைட் அகழ்வு வேலைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் மீண்டும் கடந்த வாரம் திருக்கோவில்,தாண்டியடி கடற்கரையில் அரச துறைசார் அதிகாரிகள் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்த நிலையில் மக்கள் மீண்டும் இல்மனைட் அகழ்வுக்கு அரசு அனுமதி வழங்க வெண்டாம் என கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து திருக்கோவில் மற்றும் தாண்டியடி மக்கள் நடை பவனியாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குச் சென்று இங்கு பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனிடம் இல்மனைட் அகழ்வுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டாம் என்ற கோரிக்கை மனுவை கையளித்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணிகளில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், பொத்துவில் பிரதேசசபை உப தவிசாளர் பி.பார்த்தீபன், சபை உறுப்பினர் ரீ.சுபோதரன், மக்கள் செயற்பாட்டாளர், தாமோதரம் பிரதீபன் ஆகியோர் தமது கருத்துக்களை தெரிவித்து இருந்ததுடன், 100க்கு மேற்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.