மட்டக்களப்பு கம்பஸின் கோரிக்கையை நிராகரித்த உயர்கல்வி அமைச்சு

Report Print Ajith Ajith in சமூகம்

உள்ளூர் பட்டங்களை வழங்குவதற்காக மட்டக்களப்பு கம்பஸ் சமர்ப்பித்த விண்ணப்பம், ஏப்ரல் 5, 2019 அன்று உயர்கல்வி அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது.

கம்பஸை நிர்வகிக்கக்கூடிய சுயாதீன நிதி கட்டமைப்பை நிரூபிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் தவறியதால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழு முன் சாட்சியமளித்த உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கமல் ரோஹிதா உடுவாவல, மட்டக்களப்பு கம்பஸிற்கு 5 பில்லியன் ரூபா வெளிநாட்டு நிதி கிடைத்ததாக தெரிவித்தார்.

எனினும் உள்ளூர் பட்டங்களுக்கான விண்ணப்பத்தில், கம்பஸிற்கு பெறப்பட்ட வெளிநாட்டு நிதி தொடர்பான விவரங்களை வழங்கவில்லை.

பல்கலைக்கழக வளாகத்தின் அதிகாரிகள் இந்த நிதி உதவிகளை இலகுக்கடன்களாகப் பெற்றிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பாக உயர் கல்வி அமைச்சு நடத்திய கூட்டங்களில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் மற்றும் வளாக நிர்வாகத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை பேருவளையில் அமைந்துள்ள ஜாமியா நலீமியா இஸ்லாமிய நிறுவனம் உயர் கல்வி அமைச்சின் கீழ் உள்ளூர் பட்டங்களை வழங்குவதற்கான ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்படவில்லை என்றும் சாட்சி ஆணைக்குழுவின் முன் தெரிவித்தார்.

குறித்த நிறுவனம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதம் தொடர்பான குறைந்தது ஒரு திட்டத்தையாவது நடத்த வேண்டும்.

எனினும் ஜாமியா நலீமியா இஸ்லாமிய நிறுவனத்தில் இளங்கலை கலை மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் பட்டப்படிப்பு மட்டுமே போதிக்கப்படுகிறது.

எனவே அந்த நிறுவனத்தை ஒரு உள்ளூர் பட்டப்படிப்பு வழங்குநராக பதிவு செய்வதில் பிரச்சினை இருந்தது என்று உயர் கல்வி அமைச்சின் கூடுதல் செயலாளர் கமல் ரோஹிதா உடுவாவல சாட்சியமளித்தார்.