வடக்கில் அதிகரிக்கும் போதைப்பாவனை! வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை

Report Print Sumi in சமூகம்

வடக்கில் போதைவஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு "புனர்வாழ்வு நிலையம்" அவசியம் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்

வடக்கில் போதைவஸ்து பாவனை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தினை பொறுத்தவரைக்கும் போதைவஸ்து பாவனை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. அதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.

வடபகுதிக்கு கொண்டு வரப்படுகின்ற கஞ்சா, ஹெரோயின் போன்ற பொருட்களை தடை செய்யப்பட வேண்டும்.

அதேபோல் அரசாங்கத்தின் பல வகையான கட்டுப்பாட்டு நிலைமைகளை மேலும் கட்டுக் கோப்புக்குள் கொண்டுவரும்படி கேட்டிருக்கிறோம்.

அதேசமயம் பாவனையாளர்கள் அதாவது போதைவஸ்துக்கு அடிமையானவர்களை உடனடியாக புனர்வாழ்வளித்து அவர்களை மீட்க வேண்டும்.

ஏனெனில் ஹெரோயின் போன்ற போதைவஸ்தினை பாவிப்பவர்கள் அவற்றை தினசரி பாவிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அதாவது அந்த போதைவஸ்துக்கு அடிமையானவர்கள் அவ்வாறானவர்களை புனர்வாழ்வளித்து சிகிச்சை வழங்குவதற்கு பொருத்தமான நிலையம் வடபகுதியில் இல்லை.

ஆகவே வட பகுதியில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இதற்கான முயற்சியிலும் நாங்கள் ஈடுபடுகின்றோம்.

ஏனெனில் இந்த புனர்வாழ்வு நிலையம் இருந்தால் உடனடியாகவே அவர்கள் சிகிச்சைக்கும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சாதாரண பிரஜைகளாக பின்னர் அவர்கள் இந்தப் பகுதியில் இருக்க முடியும்.

அவ்வாறு இந்த புனர்வாழ்வு நிலையம் இல்லாத நிலையில் குடும்ப உறுப்பினர்களும், அந்த சமுதாயமும் பல சிக்கல்களையும், சவால்களையும் எதிர் நோக்குகின்றது.

குறிப்பாக போதை பொருளுக்கு அடிமையானவர் அந்த அடிமை நிலையிலிருப்பவர் தொடர்ச்சியாக அந்த போதை பொருளை நாடிச் செல்வார்.

அது தவிர அவர் பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது. பணம் கையில் இல்லாதவிடத்தில் அவர் பல்வேறுபட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவார்.

அதாவது களவு அல்லது வேறு ஏதாவது செயற்பாட்டில் ஈடுபட்டு பணத்தை பெற்று தேவையான போதைப் பொருளைக் கொள்வனவு செய்ய முயற்சிப்பார்.

அதனை இல்லாதொழிப்பதற்கு ஒருபுறம் நாங்கள் இந்த போதைவஸ்தினை கடத்திக் கொண்டு வருவதை முற்றாக நிறுத்த வேண்டும்.

அதே சமயம் பாவனையாளர்களாக இருக்கின்றவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி அவர்களை நல்லவர்களாக மாற்ற நாங்கள் முயற்சிக்க வேண்டும்.

எனவே வடக்கில் அவ்வாறான ஒரு புனர்வாழ்வு நிலையத்தினை அரசாங்கம் மிக விரைவில் அமைக்க வேண்டும் எனவும் நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.