தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர் குறித்து வௌியான தகவல்!

Report Print Ashik in சமூகம்

சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய நிலையில் கைது செய்யப்பட்டவர் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் என தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் சபுகஸ்கந்த பகுதியில் வைத்து 23 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த கான்ஸ்டபிள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் சட்ட விரோத ஊடுருவல் போன்ற நடவடிக்கை நடைபெற உள்ளதாக இராமேஸ்வரம் கடலோர காவல் ஆய்வாளருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .

அப்போது முகுந்தராயர் சத்திரம் அருகே கம்பிபாடு என்ற கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரிக்க பொலிஸார் முற்பட்ட போது அந்த நபர் பொலிஸாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றுள்ளார்.

பின்னர் அவரை மடக்கி பிடித்த மெரைன் பொலிஸார், இராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர், இலங்கை, மொனாராகலை மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டார நாயக்க (30) என்பது விசாரணையில் தெரிவந்தது.

மேலும் மெரைன் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் பிடிப்பட்டவர், இலங்கை காவல்துறையை சேர்ந்தவர் என்பதும் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுக காவல் நிலையத்தில் 2018ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

இலங்கை - தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து கண்ணாடி இழை படகு ஒன்றில் சர்வதேச கடல் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.

எதற்காக இவர் தமிழகத்திற்க்குள் நுழைந்தார் என்பது குறித்து தமிழக கடலோர காவல் குழு பொலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரனைக்கு பின் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார்.

இந்நிலையில், சமீப காலமாக தனுஸ்கோடி கடல் பகுதியில் இருந்து கஞ்சாவும், இலங்கையில் இருந்து தங்க கட்டிகளும் கடத்தப்பட்டு வருகிறது.

எனவே பிடிபட்ட இலங்கை நபருக்கு கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக இராமேஸ்வரம் வந்தாரா என்ற கோணத்தில் உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.